என்னெனச் சொல்வேன்…!?! – தமிழ்க்கவிதை

என் மடிதனில் உன்மயிர் மேகமாய்ப் படர்ந்திருக்க,

என் இடக்கை விரல்மேலுன் பின்தலை சாய்ந்திருக்க,

உன்னிடையிடை வரிதனில் என் வலக்கை பதிந்திருக்க,

வெளிர்சனல் உடைக்குழல்களில் அனல்புகைப் புலர்ந்திருக்க,

எழுபதுஆறு எண்ணிக்கை மீறி என்னிதயம் துடித்திருக்க,

சத்தமில்லாமல் கத்திக்கொண்டிருக்கும் உன்

கயல்விழிதனை நான் பார்த்திருக்கும் போது,

என்னிமைகளின் மயிரிழை இடுக்குகள் வழியே

சட்டென உள்நுழைந்த சிறுமின்னலின் தாக்கமும்,

என் நாசியின் துளைப்புகுந்த உன் மென்சதை வாசமும்

மறையும் முன்பே, என் செவிவழி உணர்ந்தேன் –

மெதுவாய் ஓட்டம் நிறுத்தும் உன்னிதயத் துடிப்பினை;

கனவுகள் தாண்டி என்னுள்ளக் கொதிப்புகள்

உருமாறி நிறைவேறும் இவ்வேளையினில்,

நிரந்தரமாய் எனை நிலத்தினில் நிறுத்திவிட்டு,

விடைபெறும் உன்னுயிர்ப் பிடுங்கிச் சென்றிடும்

விதிநிலைதனை நான் என்னெனச் சொல்வேன்…!?!

Advertisements